பொது

சமையல்காரப் பெண் கொலை; மூன்று ஆடவர்களுக்குத் தடுப்புக் காவல்

17/11/2025 03:40 PM

புக்கிட் மெர்தாஜாம், 17 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று, பினாங்கு, லோரோங் புக்கிட் ஜூருவில் உள்ள ஓர் உணவகத்தில் பணிபுரிந்து வந்த, மியன்மார் நாட்டுப் பிரஜையான சமையல்காரப் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு, உடன்பிறப்புகள் இருவர் உட்பட ஆடவர்கள் மூவர், இன்று தொடங்கி ஏழு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரணையை மேற்கொள்ளும் பொருட்டு, மியன்மார் நாட்டவர்களான அம்மூவருக்கும் எதிரான அத்தடுப்புக் காவல் உத்தரவை மஜிஸ்திரேட் ரொஷயாதி ரடெல்லா பிறப்பித்தார்.

40 வயது ஆடவர் மற்றும் அவரின் தம்பி, 34 வயதான ஆடவர் உட்பட மற்றொரு 50 வயது நபருக்கும் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சமைத்த உணவு சுவையற்று இருப்பதாகக் கூறி கொலை செய்யப்பட்ட அப்பெண்ணுக்கும், வாடிக்கையாளர்களான அவ்வாடவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இரவு மணி ஒன்பது அளவில் அப்பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

40 வயதிற்குட்பட்ட அப்பெண் கடுமையான காயங்களுக்கு ஆளான நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அதோடு, மியன்மார் பிரஜைகளான அப்பெண்ணின் கணவர் மற்றும் நண்பர்களும் இச்சம்பவத்தினால் காயங்களுக்கு ஆளாகினர்.

சம்பவத்தின் போது, சந்தேக நபர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததாக நம்பப்படும் வேளையில், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)