கோத்தா கினபாலு, 17 நவம்பர் (பெர்னாமா) -- 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம், எம்.ஏ63-இல் இடம்பெற்றுள்ளபடி, சபாவின் வருவாயில் 40 விழுக்காட்டை அம்மாநிலத்திற்கு வழங்கும் கோரிக்கை தொடர்பான வழிமுறையைப் பற்றி விவாதிக்க மத்திய அரசாங்கம் மற்றும் சபா மாநில அரசை உட்படுத்தி ஒரு சிறப்பு செயற்குழு நிறுவப்பட்டுள்ளது.
சபா மாநில செயலாளர் டத்தோ ஶ்ரீ சஃபார் உந்தோங் மற்றும் கருவூல பொது செயலாளர் டத்தோ ஜோஹான் மாமூட் மெரிகான் ஆகியோர் அந்த செயற்குழுவிற்கு இணைத் தலைவராக பொருப்பு வகிப்பார்கள் என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
இந்த சிறப்புக் குழு, தமது தலைமையிலான எம்.ஏ63 அமலாக்க நடவடிக்கை மன்றத்தின் தொழில்நுட்பக் செயற்குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.
மேலும், விவாதங்களின் அண்மைய நிலவரம் மற்றும் முன்மொழியப்பட்ட வழிமுறை குறித்து அமைச்சரவைக்கு நேரடியாக அறிக்கை அளிக்கவும் அந்த செயற்குழுவுக்கு அனுமதி உண்டு என்றும் அவர் விவரித்தார்.
''இந்த அமலாக்கம் குறித்து விவாதிக்க எங்களுக்கு உள்ள கால அவகாசம் மிகக் குறைவு. செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. முடிந்தால் அதைச் செயல்படுத்தும் வழிமுறையை விரிவாக விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அறிக்கை மற்றும் அவர்களின் விவாதங்களின் முடிவுகளுக்காக நான் காத்திருக்கிறேன்,'' என ஃபடில்லா யூசோப் கூறினார்.
சபா மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர்-உடன் ஃபடில்லா முன்னதாக சந்திப்பு நடத்தினார்.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)