கோப்பெங், 17 நவம்பர் (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் உள்ள கோப்பெங் தமிழ்ப்பள்ளி பல ஆண்டுகளாக கரையான்களால் அரிப்பட்டு சேதமடைந்துள்ளது.
இதற்கு தீர்வுக் காணும் பொருட்டு மத்திய அரசாங்கம் ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்பள்ளியை புதிய பள்ளியாக சீரமைக்கவிருப்பதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பினால், கோப்பெங் வட்டார மக்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கார் இங் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கம் வழங்கும் இந்நிதியைக் கொண்டு, இப்பள்ளி வளாகத்தில் விரைவில் ஒரு புதிய கட்டிடத்தை நிர்மானிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகிய தரப்புகள், புதிய கட்டிடத்தை நிர்மானிப்பதற்கு வழங்கிவரும் ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் அவர் நன்றிப் பாராட்டினார்.
இதனிடையே, சுமார் 55 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளிக்கு புதிய கட்டடத்தை கட்டுவதற்கு மத்திய அரசாங்கம் உதவி கரம் நீட்டியதை பெரிய வெற்றியாக கருதுவதாக கம்பார் மாவட்ட மன்ற உறுப்பினர், சண்முகம் சுப்ரமணியம் தெரிவித்தார்.
''ஒரு நல்ல தீர்வு கிடைத்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட்டில் வழங்கிய நிலையில் புதிய கட்டடப்படவுள்ளது. எங்களது நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். இது எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி.,'' என்றார் அவர்.
சிம்பாங் பூலாயில் உள்ள சமுக மண்டபத்தில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக்கொண்டப் பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)