உலகம்

காற்று மாசைக் குறைக்க அரசாங்கம் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

21/11/2025 02:28 PM

புதுடெல்லி, 21 நவம்பர் (பெர்னாமா) --  இந்தியா புதுடெல்லியில் பதிவு செய்யப்படும் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து ஆபத்தான அளவிலேயே இருப்பதால் நகரத்தின் கடுமையான காற்று மாசு நெருக்கடியைக் குறைக்க அரசாங்கம் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நகர குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக புதுடெல்லி காற்று மாசுபாடு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்று குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

''டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு கோடி மரங்களை நடுவதற்கு அவர்கள் (அரசாங்கம்) இலக்கை நிர்ணயிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை விதிப்பதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன, அதே நேரத்தில் தனியார் (அலுவலகங்கள்) செயல்படுவதில்லை'', என்று ஜோகிந்தர் சிங் கூறினார்.

நேற்று புதுடெல்லியில், காற்றின் தரக் குறியீடு 399-ஆகப் பதிவாகி மிகவும் ஆபத்தான நிலையை எட்டியதாக அந்நாட்டின் காற்றின் தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் SAFAR கூறியது.

அதிகரித்து வரும் மாசு அளவைக் கையாள்வதற்காக, அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகளுக்கு புதுடெல்லி அரசு தடை விதித்துள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மொத்த நிலப்பரப்பில் வனப்பகுதியையும் பசுமைப் பரப்பையும் 33 விழுக்காடாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)