இந்தோனேசியா, 21 நவம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, பாலி தீவில் நவம்பர் 12 முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்க போட்டியில் தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்தனர்.
பள்ளி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மாணவர்கள் வடிவமைத்த Reptox எனப்படும் பாம்பு விரட்டும் திட்டம் அனைத்துலக மேடையில் பாராட்டைப் பெற்று பள்ளியின் பெயரையும் உலகளவில் பிரபலம் அடையச் செய்தது.
அண்மையில் டென்பசார், பாலியில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்க போட்டியில் 24-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. மொத்தம் 300-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
மலேசியாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட நிலையில் வட கிந்தா மாவட்டத்தில் இருந்து தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளியின் இளம் கண்டுபிடிப்பாளர்களான நர்மதா ஆறுமுகம், தரினி தயானந்த், மற்றும் திவிஷா சிவராஜ் ஆகியோர் தங்களின் புத்தாக்க படைப்பைக் காட்சிப்படுத்தினர்.
''இந்த அனுபவம் எங்களுக்கு குழு ஒருமைப்பாடு, தன்னம்பிக்கை, மற்றும் உலகளாவிய போட்டியில் எவ்வாறு திகழ்வது என்பதை கற்றுத் தந்தது. எதிர்காலத்தில் மேலும் பல புதுமைகளை உருவாக்கி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்க விரும்புகிறோம்,'' என்றார் மாணவி திவிஷா சிவராஜ்.
அதோடு இச்சாதனையைச் சாத்தியமாக்க பள்ளித் தலைமை ஆசிரியர் சரஸ்வதி பரமசிவத்தின் நிதி தேடும் அயராத முயற்சியும் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் வழங்கிய ஆதரவும் உறுதுணையாக இருந்ததாகவும் மாணவர்கள் கூறினர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)