கோலாலம்பூர், நவம்பர் 22 (பெர்னாமா) -- அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தற்போது அரசியலிலும் களம் கண்டிருக்கும் நடிகர் விஜயை சந்திப்பதற்கான வாய்ப்பு மலேசிய ரசிகர்களுக்கு கிட்டியுள்ளது.
தமது 69-வது திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு அவர் வருகை புரியவிருப்பதாக, அதன் ஏற்பாட்டாளரான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
சுமார் 85,000-க்கும் மேற்பட்டவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் கூறினார்.
'தளபதி திருவிழா' என்ற கருப்பொருளில் சுமார் 10 மணி நேர கொண்டாட்டமாக நடைபெறும் இவ்விழாவில் 30 பாடகர்கள், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசை நிகழ்ச்சி, இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பிரபல கலைஞர்களின் படைப்புகள் மற்றும் விஜய்யின் 'ஜனநாயகன்' படப் பாடல்கள் உட்பட அவரது படங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.
செயற்கைக்கோள் மற்றும் இலக்கவியல் தளங்கள் மூலம் உலகம் முழுவதும் இவ்விழா ஒளிபரப்பப்படும் என்பதால், தெற்காசிய பொழுதுபோக்கு மையமாக கோலாலம்பூரின் பெருமையை நிலைநிறுத்த முடியும் என்று டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, ஜனநாயகன் திரைப்படத்தின் மலேசிய சந்தைக்கான விநியோக உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் பெற்றுள்ள வேளையில், அடுத்தாண்டு ஜனவரி 9-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியீடு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)