கோலாலம்பூர், நவம்பர் 22 (பெர்னாமா) -- அரசாங்கம் வழங்கக்கூடிய சாரா உதவித் தொகை, PEDULI SIHAT போன்ற அனைத்து சலுகைகளையும் இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முஹமட் ரிட்சுவான் அப்துல்லா பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட வேண்டும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் அறிவுறுத்தியிருக்கிறார்.
''நாட்டில் உள்ள உதவித் தொகைளைப் பயன்படுத்தி வரும் முஹமட் ரிட்சுவான் அப்துல்லாவை ஏன் இன்னும் கண்டுபிடிக்க இயலவில்லை அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் எம். குலசேகரன்.
தமது 16 வயது பிரசன்னா திக்ஷாவைப் போலீஸ் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்நிறுத்தி இன்று இந்திரா காந்தி மேற்கொண்ட அமைதி பேரணியில் கலந்து கொண்ட போது குலசேகரன் அவ்வாறு கூறினார்.
அமலாகத் தரப்பினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை குறைவதற்கு முன்னதாக இவ்விவகாரத்திற்கு விரைந்து உரிய தீர்வு காணுமாறு ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அவர் கேட்டுக் கொண்டார்.
போலீஸ் முறையான வழியில் செயல்பட்டால் பிரசன்னா திக்ஷாவைத் தமது கணவரிடம் இருந்து காப்பாற்ற இயலும் என்று எம்.இந்திரா காந்தி தெரிவித்தார்.
"பிள்ளையை 16 ஆண்டு பார்க்காமல் இருப்பது ஒரு தாயின் தவிப்பு ஆகையால் போலீசார் இதனை முடித்துக் கொடுக்க வேண்டும். என் மகளை என்னிடம் மீட்டுக்கொடுக்க வேண்டும்," என்றார் எம். இந்திரா காந்தி.
கடந்த 16 ஆண்டுகளாகத் தமது வழக்கு இழுபறியில் உள்ள நிலையில் கோலாலம்பூர் சோகோ பேரங்காடியில் இருந்து புக்கிட் அமான் வரை இந்திரா காந்தி அமைதி பேரணி நடத்தினார்.
இந்த அமைதி பேரணியில், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாம் மதத்தைத் தழுவிய முஹமட் ரிட்சுவான் அப்துல்லா 2009ஆம் ஆண்டில் மகள் பிரசன்னா 11 மாதக் குழந்தையாக இருந்த போது பாலர் பள்ளி ஆசிரியரான அவரின் தாயார் இந்திரா காந்தியிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றார்.
ரிட்சுவானைக் கைது செய்து பிரசன்னாவை அவரது தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கும் படி 2016ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்திரா காந்தி மேற்கொண்ட அமைதி பேரணி எவ்வித இடையூறு இல்லாமல் மாலை மணி 4க்கு சுமுகமாக நிறைவு பெற்றதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சசாலி ஆடம் தெரிவித்தார்.
"நாங்கள் அவர்கள் அமர்ந்திருப்பதைத் தடுக்கவில்லை. ஆனால் அவர்கள் பொது ஒழுங்கை சீர்குலைக்காமல், போக்குவரத்தைத் தடுக்காமல், பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தாமல் பார்த்துக் கொள்கிறோம். இதுபோன்று நிகழ்ந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்,'' என்றார் ஏ.சி.பி. சசாலீ அடாம்.
முஹமட் ரிசுவான் அப்துல்லாவைத் தேடும் பணியை விரிவுபடுத்துமாறு அரச மலேசிய போலீஸ் படைக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)