கோலாலம்பூர், நவம்பர் 22 (பெர்னாமா) -- வறுமை நிலையில் உள்ள பலர் தங்களின் கடன் சூழ்நிலையை சமாளிப்பதற்காக வட்டிக்கு கடன் கொடுப்பவர்களின் உதவியை நாடுகின்றனர்.
வங்கியில் கடன் வாங்குவதற்கான விதிமுறைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதிய தகுதி இல்லாதவர்களே இத்தகையோரின் உதவியை நாடுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அவசரத்திற்குப் பண உதவி கிடைப்பதால், கடன் கொடுப்பவர்களின் பின்புலம் அறியாமல் கூடுதல் வட்டியில் கடனைப் பெற்று பலர் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக கூறுகிறார் வழக்கறிஞர் கோகிலவாணி வடிவேலு.
கடன் வழங்குவதற்கான உரிமம் உடைய தரப்பினரிடம் முறையான விளக்கங்களைக் கேட்டறிந்து, விதிமுறைகளை சரியாக படித்து புரிந்து கொண்ட பின்னரே, அதற்கான பத்திரத்தில் கையெழுத்திடுமாறு வழக்கறிஞர் கோகிலவாணி வடிவேலு வலியுறுத்தினார்.
"முதலில் சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனம் குறித்து இணையத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் சேவைகள் குறித்து அதில் வழங்கப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்ந்த பின்னரே அந்நிறுவனத்தை நாடுவதைக் குறித்து யோசிக்க வேண்டும். மேலும் விதிமுறைகளை முறையாக படிக்காமல் கையெழுத்திடாதீர்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடன் வாங்கும் போது சம்பந்தப்பட்டவர்களின் அடையாள அட்டை, வங்கி அட்டை உள்ளிட்ட சுய ஆவணங்கள் எதையுமே, கடன் வழங்கும் தரப்பினர் தங்கள் வசம் வைத்து கொள்ள முடியாது என்பதையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
"எக்காரணத்தைக் கொண்டு அவர்கள் அதை தன்வசம் வைத்து கொள்ள முடியாது. மேலும் கடனை முறையாக திரும்ப செலுத்த முடியாத நிலையில் அவமானப்படுத்துவது, பெயருக்கு களங்கத்தை விளைவிப்பது, வீட்டில் சாயம் ஊற்றுவது போன்ற நடவடிக்கைகளை கடன் வழங்கிய நிறுவனங்கள் மேற்கொண்டால் அது சட்டப்படி குற்றமாகும்," என்று கோகிலவாணி விவரித்தார்.
ஒருவேளை அவர்கள் வங்கி அட்டையைக் கொடுத்தாக வேண்டும் என்று வற்புறுத்தினால், நிச்சயம் அது உரிமம் பெற்ற வட்டி நிறுவனமாக இருக்காது என்பதை அறிந்து அந்த தரப்பினரை தவிர்க்க வேண்டும் என்று கோகிலவாணி ஆலோசனைக் கூறினார்.
அவ்வாறு உரிமம் இல்லாத அல்லது ஆலோங் போன்ற வட்டிமுதலைகளிடம் கடன் வாங்கும் போது அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
"கூடுதலாக வட்டிவிகிதத்தை அவர்கள் நிர்ணயிப்பதோடு சட்டத்திற்குப் புறம்பான மேலும் பல வசூலிப்புகளையும் அவர்கள் செய்வார்கள். இது கடன் வாங்கியவர்களுக்கு மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்தி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்," என்று அவர் கோடிகாட்டினார்.
இதனிடையே, உரிமம் பெற்ற வட்டி நிறுவனங்களின் வட்டி விதிப்பு முறை குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.
"ஏதேனும் உடைமைகளை அடமானம் வைத்து கடன் வாங்கினால் ஆண்டுக்கு 12 விழுக்காடு மட்டுமே அவர்களால் வட்டி தொகை விதிக்க முடியும். அதுவே எவ்வித அடமானமும் இன்றி வெறும் கடனாக மட்டும் பெற்றுக் கொண்டால் 18 விழுக்காடு வரை விதிக்கலாம். இதைத் தவிர்த்து கூடுதலாக விதித்தால் அவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை," என்றார் அவர்.
அதேவேளையில், பணப்பட்டுவாடா இயந்திரத்தின் மூலமோ அல்லது நேரடியாகவோ வட்டிப் பணத்தை செலுத்தும் போது, அதற்கான அனைத்து ரசீதுகளையும் கடன் வாங்குபவர்கள் முறையாக வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு வைத்திருக்காவிடில், பின்னாளில் கூடுதலாக வட்டியோ அல்லது அசல் தொகையை செலுத்துவதற்கான நிலையும் ஏற்படலாம் என்று கோகிலவானி நினைவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)