பொது

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம்

25/11/2025 07:16 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் பெண்கள் பல்வேறு வன்முறைகளுக்கு உட்படுத்தப்படும் நிலையில் அந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதோடு அதற்கு நியாயமாக தீர்க்கமாக குரல் கொடுக்க வேண்டும் என்பது இந்நாளின் வழி நினைவூட்டப்படுகிறது.

இன்றைய சூழலில் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் மற்றும் அதன் விழிப்புணர்வு தொடர்பில் பொதுமக்கள் சிலரிடம் பெர்னாமா செய்திகள் கருத்து கேட்டறிந்தது.

பெண்களுக்கான வன்முறை என்பது உடல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக இருக்கும் நிலையில். பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பெண்களின் பிரச்சனை மட்டும் அல்ல. அது மனித குலத்தின் பிரச்சனையாக காணப்படுவதாக  பொதுமக்களில் சிலர் கூறினார். 

இருப்பினும் இவ்வாறான வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் அதனை புகார் செய்வதில் தயக்கம் காட்டுவதற்கான காரணங்களை இவ்வாறு குறிப்பிட்டனர். 

"வன்முறையை நான் எப்பொழுதும் மறுக்கின்றேன், அது பெண்னுக்கோ அல்ல ஆண்களுக்கோ நடந்தாளும் தவறுதான். வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் இதனை புகார் செய்யாத தற்கான காரணம், குடும்ப மானம் சீர்குழையும் மற்றும் அவர்கள் மற்றவர்களைச் சார்ந்து இருப்பதால் தான்,'' என்றார் திவ்யா விக்னேஸ்.

மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக எடுக்கப்பட வேண்டும் என்பதோடு அதனை எதிர்த்து போராட அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இன்னும் சிலர் கூறினர். 

''கல்வி மிகவும் முக்கியம், இந்த வன்முறை தடுப்பதைக் குறித்து நிறைய வழிமுறைகள் இணையத்தில் பெண்கள் கற்றுக்கொள்ள இயலும்,'' என்றார் முஹமட் அஸ்ரின் சுலைமான் 

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் உலகில் மிகவும் பொதுவான மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான  உலகை உருவாக்கிக் கொடுப்பதில் சமூகத்தின் கடமை என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)