புத்ராஜெயா, நவம்பர் 26 (பெர்னாமா) -- பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முஹமட் அகின் ஆல்பர்ட் தேய் எனும் தொழிலதிபர் எனும் தொழிலதிபர் லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் உடனடியாக விசாரிக்கும்.
குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஆல்பர்ட் தேயிடமும் ஷம்சுல் இஸ்கண்டாரிடமும் தமது தரப்பு விரைவில் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் நோக்கத்திற்காக எஸ்.பி.ஆர்.எம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைக்கும் என்று டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பொதுமக்கள் எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகளைச் சேகரிக்க எஸ்.பி.ஆர்.எம்முக்கு இடம் அளிக்கும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று ஷம்சுல் இஸ்கண்டார் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனிடையே, டத்தோ ஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டாரின் பதவி விலகல் கடிதத்தை இன்று பெற்றுக்கொண்டதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஷம்சுல் இஸ்கண்டாரின் சேவைக்குத் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டார்.
எந்தவொரு வெளி தரப்பினரின் தலையீடும் இல்லாமல் பெறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் உடனடி விசாரணையை மேற்கொள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் சுதந்திரமாகச் செயல்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மடானி அரசாங்கம் தனது வெளிப்படையான மற்றும் நேர்மையான கொள்கைகளில் உறுதியாக உள்ளதோடு சட்டத்தின்படி விசாரணை செயல்முறைக்கு வழிவிடுவதாக அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)