கோலாலம்பூர், நவம்பர் 26 (பெர்னாமா) -- சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை கழகத்திற்கு மரியாதை செலுத்துதல் ஆகிய கொள்கைகளுக்கு ஏற்ப பேராக் ஈப்போ உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு இணங்க எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் மற்றும் அவரின் மகள் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்கான முயற்சிகளை அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்திரா காந்தியின் கணவர் கே. பத்மநாதன் அல்லது முஹமட் ரிட்சுவான் அப்துல்லாவின் அடையாளத்தைப் பயன்படுத்தி BUDI மடானி மற்றும் ரஹ்மா உதவித் தொகை சாரா போன்ற பல்வேறு வகையான அரசாங்க உதவிகளைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தேசிய போலீஸ் படை தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட நபருக்கு இன்னும் அமலாக்கத்தில் உள்ள சிறப்பு பயணக் கட்டுப்பாடு எஸ்.பி.கே நிலையை உறுதிப்படுத்த மலேசிய குடிநுழைவுத் துறையுடன் இணைந்து பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதை டத்தோ ஸ்ரீ முஹமட் காலித் சுட்டிக்காட்டினார்.
இவ்வழக்கைக் கையாள்வதில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டப்படி நீதி நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிப்படையாகவும் நேர்மையுடனும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான விசாரணை செயல்முறையைப் பாதிக்கக்கூடிய எந்தவோர் ஊகங்களையோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு முஹமட் காலிட் அறுவுறுத்தினார்.
அதோடு, அச்சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து விசாரணைக்கு உதவ முன்வருமாறு பி.டி.ஆர்.எம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திரா காந்தியின் வழக்கு நிர்வகிப்பு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)