கோலாலம்பூர், டிசம்பர் 11 ( பெர்னாமா) -- இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முஹமட் ரிட்வான் அப்துல்லா மற்றும் அவரின் மகளைக் கண்டுபிடிக்கும் செயல்முறைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டவர்கள் அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பாக பெறப்படும் ஒவ்வொரு தகவலும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு தற்போதுள்ள விசாரணை நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹாமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
சட்டத்தின்படி இந்திரா காந்தியின் மகளைக் கண்டுபிடிப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகள் உட்பட நீதிமன்றத்தின் ஒவ்வொரு உத்தரவையும் பி.டி.ஆர்.எம் எப்போதும் மதிப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ முஹாமட் காலிட் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்தியின் மகளைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நேர்மை, தொழில்முறை மற்றும் சட்டத் தேவைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு பி.டி.ஆர்.எம் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று அவர் கூறினார்.
இந்திரா காந்தியுடனான அதிகாரப்பூர்வ சந்திப்பு நேற்று மாலை மணி 4.40-க்கு புக்கிட் அமானில் நடைபெற்றதோடு அச்சந்திப்பில் சட்டம் மற்றும் கழகச் சீர்த் திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரனும் சமூக ஆர்வலர் அருண் துரைசாமியும் கலந்து கொண்டதை முஹமாட் காலிட் உறுதிப்படுத்தினார்.
அச்சந்திப்பில் முஹமட் ரிட்வான் அப்துல்லா மற்றும் மகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இந்திரா காந்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு குலசேகரன் பி.டி.ஆர்.எம்-ஐக் கேட்டுக் கொண்டதாக முஹமாட் காலிட் தெரிவித்தார்.
இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாதன் அல்லது முஹமட் ரிட்வான் அப்துல்லாவைத் தேடும் பணியை விரிவுபடுத்துமாறு நவம்பர் 21-ஆம் தேதி ஈப்போ உயர் நீதிமன்றம் பி.டி.ஆர்.எம்-க்கு உத்தரவிட்டிருந்தது.
2009-ஆம் ஆண்டில் முஹமட் ரிட்வான் அப்துல்லா இந்திரா காந்தியின் அனுமதியின்றி அவர்களின் மூன்று குழந்தைகளையும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றினார்.
2018-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளையும் அவரது முன்னாள் கணவர் மதம் மாற்றியது சட்டபடி செல்லாது என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)