கோலாலம்பூர், 27 நவம்பர் (பெர்னாமா) -- மின்சார திருட்டு நடவடிக்கைகளினால், இதுவரை தெனாகா நேஷனல் நிறுவனத்திற்கு 514 கோடி ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2020 தொடங்கி 2025-ஆம் ஆண்டு வரையில், அதனை அம்பலப்படுத்தும் 91 சோதனைகளின் வழி, 14,489 கட்டிடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு 77 விசாரணை அறிக்கைகளும் திறக்கப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
அதே காலக்கட்டத்தில், மின்சாரத் திருட்டால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை உட்படுத்தி 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில், விசாரணைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அவ்வளாகங்கள் பாதிக்கப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், தொடர்புடையவர்கள் அவ்விவகாரத்தில் குற்றம் சாட்டப்படாததோடு, எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் ஃபடில்லா விவரித்தார்.
"எனவே, நாங்கள் எடுக்க விரும்பும் நடவடிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். குறிப்பாக, குடியிருப்பு அல்லது வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் தங்கள் இடத்தை மக்களுக்கு வாடகைக்கு வழங்கினால், விண்ணப்பிக்க அவர்கள் தங்கள் பெயரைப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுப்பற்ற வகையிலான மின்சார பயன்பாட்டிற்கு பலியாகாமல் இருக்க குத்தகைதாரர்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்," என்றார் அவர்.
இன்று, மக்களவையில், கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் கூடுதல் கேள்விக்கு பதிலளித்த எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான ஃபடில்லா அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)