பொது

சபா தேர்தல்: 903 சரவாக் போலீசார் இன்று சபாவிற்குப் பயணம்

27/11/2025 05:35 PM

கூச்சிங், நவம்பர் 27 (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தல் காலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகளில் உதவுவதற்காக, சரவாக் போலீஸ் படையைச் சேர்ந்த 903 அதிகாரிகளும் உறுப்பினர்களும் இன்று அம்மாநிலத்திற்குப் புறப்பட்டனர்.

தேர்தல் செயல்முறை சீராகவும், எவ்விதப் பிரச்சனையும் இன்றி, சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய, வாக்களிப்பு முடியும் வரையில், அவர்கள் அனைவரும் அங்கு இருப்பார்கள் என்று சரவாக் போலீஸ் ஆணையர் டத்தோ முஹமட் சைனால் அப்துல்லா தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் மாநிலத் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும்போது நடைமுறைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும், தேர்தல் தரநிலைக்கான செயல்பாட்டு தர விதிமுறை SOP-க்கு ஏற்ப, பாதுகாப்பு கடமைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் பயிற்சிகளில் பங்கேற்றதாக டத்தோ முஹமட் சைனால் அப்துல்லா கூறினார்.

''அது, சபா போலீஸ் படையின் வேலை, அது குறித்து நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், சில பகுதிகள் சர்ச்சைகுரியவையாக வகைப்படுத்தப்பட்டடிருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய இடங்களில் தேவையான போலீஸ் உறுப்பினர்களைப் பணியமர்த்துவது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மனித வளங்களை மட்டுமே அனுப்புகிறோம். தாங்கள் எங்குப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்,'' என டத்தோ முஹமட் சைனால் அப்துல்லா கூறினார்.

இன்று, சரவாக் போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)