புத்ராஜெயா, நவம்பர் 29 (பெர்னாமா) -- சனிக்கிழமை காலை மணி 8 நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுகாதார வசதிகளின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவ சேவை தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக, அந்த எண்ணிக்கையில் 25 இடங்களின் செயல்பாடுகள் இதர இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
''நாங்கள் செயல்படும் இடத்தை மாற்றினோம். 29 இடங்கள் இன்னும் வழக்கம் போல் செயல்பட முடியும். ஆம், ஒருவேளை தண்ணீர் உள்ளே நுழைந்திருக்கலாம், ஆனாலும் அவை இன்னும் செயல்பட முடியும்,'' என்றார் சுல்கிஃப்லி அஹ்மாட்.
சனிக்கிழமை, புத்ராஜெயாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு கருத்தரங்கை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,672 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்களில் 433 பேர் கடுமையான சுவாச நோயினாலும், 134 பேர் தோல் தொற்றினாலு, 27 பேர் வயிற்றுப்போக்காலும், ஆறு பேர் கண் வலியாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுல்கிஃப்லி கூறினார்.
இருப்பினும், இதுவரை கடுமையான நோய் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)