ஜாலான் பார்லிமன், டிசம்பர் 01 (பெர்னாமா) -- இளைஞர்களின் வயது வரம்பை 30ஆக குறைப்பதற்கான திருத்தம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி தொடங்கி அமலுக்கு வந்தாலும் 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இளைஞர்களுக்கான அனைத்து அரசாங்க உதவிகளும் தொடரும்.
வயது வரம்பு குறைப்பு அமலாக்கத்திற்குப் பின்னர் இளைஞர்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஆதரவுகள் மற்றும் உதவிகள் குறித்த அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.
''அவர்கள் இனி இளைஞர்கள் என்று அழைக்கப்படாவிட்டாலும் அவர்களை இளைஞர்கள் என்று அழைப்பதுதான் வழக்கம். நான் உதாரணம் வழங்குகின்றேன், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களுக்குப் பல்வேறு மானியங்கள் வழங்குகிறது. அவர்கள் அரசாங்க நிதிகளுக்கு இன்னும் விண்ணப்பிக்கலாம்,'' என்றார் ஹன்னா யோ.
அமைச்சு மற்றும் அரசாங்க நிறுவனங்களின் திட்டங்களின் மூலம் 31 முதல் 40 வயதுக்குட்பட்ட குழுக்கள் தொடர்ந்து ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக அமைச்சு மேற்கொண்ட இடைக்கால நடவடிக்கைகள் குறித்து பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹன் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)