செர்டாங், டிசம்பர் 1 (பெர்னாமா) -- மலேசிய புத்ரா பல்கழைக்கழகத்தில் இம்யூனாலஜி எனும் நோய் எதிர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றார் பெர்னாமா தொலைகாட்சியின் ஆங்கில செய்தி வாசிப்பாளரான மோகேஷ் சபாபதி.
மனித உடலின் உட்புற பாதுகாப்பு அமைப்பை புரிந்துகொள்வதில் இருந்து உலகை அச்சுறுத்தும் நோய்களுக்கு எதிரான தீர்வுகளை உருவாக்கும் அத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையுடன் மலேசிய சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பிடித்துள்ளார்.
தமது தந்தை ஒரு விபத்தில் சிக்கி, நரம்பு சேதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் சிகிச்சைக்கு தேவையான செலவை ஈடுக்கட்ட முடியாமல் இருந்த அக்கணமே மோகேஷ் சபாபதியின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
அறிவியலை கொண்டு பல பேரின் வாழ்க்கையை மாற்றுவது, அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது, மனிதநேயத்தின் பாதை என்பதை கருத்தில் கொண்டு, தாம் சமூகத்திற்கு உதவும் கருவியாக மாறி இவ்வாராய்ச்சியை மேற்கொண்டதாக மோகேஷ் கூறினார்.
''அடுத்தக் கட்ட நடவடிக்கையாக நான் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராக வேண்டும். குறிப்பாக, நோய் எதிர்ப்பியல் துறையில் அங்கிகரிக்கப்பட்ட இம்யூனாலஜிஸ்ட்-ஆக வேண்டும். அறிவியல் துறைக்கு மேலும் எனது சேவையை வழங்க ஆவலோடு இருக்கிறேன். பெர்னாமாவில் செய்தியாளராகவும் தொடர்ந்து என் பணியை ஆற்றுவேன்,'' என முனைவர் மோகேஷ் சபாபதி கூறினார்.
தமது முயற்சியும் சாதனையும் வருங்கால இளைஞர்களுக்கு, இதர துறைகளில் மேலும், ஊக்கமளிக்கும் என்று அவர் பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.
''நமக்கென ஒரு அங்கிகாரத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்திய சமூதாயத்தில் மட்டுமல்லாமல், உளகளவில் இத்துறையில் சிறந்து விளங்க இளைஞர்களை ஊக்குவிக்கிறேன். நிச்சயமாக நான் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறென் என்று நம்புகிறென்,'' முனைவர் மோகேஷ் சபாபதி கூறினார்.
இதனிடையே, முனைவர் பட்டப்படிப்பில் இதுபோன்ற சாதனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதை, மோகேஷ்க்கான அங்கீகாரத்தை வழங்கிய
மலேசியா சாதனை புத்தகம், MBOR அதிகாரி சிதி ஹஜார் உறுதி செய்தார்.
''இம்யூனாலஜி துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் செய்தி வாசிப்பாளர் என்று உறுதிப்படுத்தியப் பிறகு, இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தோம்,'' என சிதி ஹஜார் ஜொஹோர் தெரிவித்தார்.
அறிவியல் உலகிலும் செய்தித்துறையிலும் தாம் இன்னும் சாதிக்க வேண்டியது இருப்பதாக, இன்று செர்டாங் புத்ரா மலேசிய பல்கழைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு பின்னர் நடைபெற்ற மலேசிய சாதனை புத்தகம் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சியில் முனைவர் மோகேஷ் அதனைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)