பொது

அல்பர்ட் தேய் மீது மேலும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு

05/12/2025 04:52 PM

ஷா ஆலம், டிசம்பர் 05 (பெர்னாமா) -- சபாவில் கனிம ஆய்வு உரிமத்திற்கான ஒப்புதலைப் பெறுவதற்காகப் பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முஹமட் அகினுக்கு 64 ஆயிரத்து 924 ரிங்கிட் கையூட்டு வழங்கியதாகத் தொழிலதிபர் அல்பர்ட் தேய் மீது இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிபதி டத்தோ முஹமட் நசீர் நோர்டின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 37 வயதான ஜியான் சீயிங் மறுத்து விசாரணைக் கோரினார்.

2023ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதியிலிருந்து 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் காஜாங் கண்றி ஹெட்ஸில் உள்ள வங்கி ஒன்றில் ஷம்சுல் இஸ்கண்டாருக்கு 62,924 ரிங்கிட் கையூட்டு வழங்கியதாகத் தேய் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள வீடொன்றிற்கு வாடகை செலுத்துவதற்காக அப்பணம் பெண் ஒருவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

சபாவில் கனிம ஆய்வு உரிமங்களை அங்கீகரிப்பதில் தேய்யுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு உதவ இந்த கையூட்டு வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்‌ஷன் 17(a)இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் வேளையில் அதே சட்டம் செக்‌ஷன் 24(1)இன் கீழ் தண்டனை விதிக்கப்படலாம்.

அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் கையூட்டு தொகையிலிருந்து குறைந்தது ஐந்து மடங்கு அபராதம் அல்லது பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

சபாவில் கனிம ஆய்வு உரிமத்திற்கான ஒப்புதலைப் பெற உதவுவதற்காக ஷம்சுல் இஸ்கண்டாருக்கு ஒரு லட்சத்து 76,829 ரிங்கிட் மூன்று சென் கையூட்டு வழங்கியதாக நேற்று தேய் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)