சைபர்ஜெயா, டிசம்பர் 05 (பெர்னாமா) -- மடானி அரசாங்கத்தின் அமைச்சரவையில் காலியான பதவிகளை நிரப்புவதற்கான பெயர் பட்டியலைக் கூடிய விரைவில் அறிவிப்பதற்கு முன்னர் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்.
அமைச்சரவையை அமைப்பது பிரதமரின் சிறப்பு அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தாலும் மடானி அரசாங்கத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் நிலைப்பாடும் கருத்தில் கொள்ளப்படும் என்று நிதி அமைச்சருமான அன்வார் கூறினார்.
''நான் முதலில் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். ஆம். மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஒப்புதலைப் பெறுவது பிரதமரின் விருப்புரிமை அல்லது அதிகாரமாகும். ஆனால் வழக்கம்போல ஜனநாயக செயல்பாட்டில் இருப்பது போல மற்றும் நண்பர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதால் கட்சித் தலைவர்களின் சில கருத்துகளையும் நான் நிச்சயமாகக் கேட்பேன். ஆனால் இறுதி முடிவை விரைவில் எடுப்பேன்,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
மக்களின் நலன்கள் மற்றும் நாட்டின் சீர்திருத்தத்தின் திசையை அடிப்படையாகக் கொண்டு கவனமாகவும் விவேகமாகவும் பரிசீலித்த பின்னரே மடானி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் பட்டியலை பிரதமர் முடிவு செய்வார் என்று முன்னதாகக் கூறப்பட்டிருந்தது.
தாம் அறிவிக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் காலியான சில அமைச்சர் பதவிகள் மட்டுமே நிரப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)