கோலாலம்பூர், டிசம்பர் 08 ( பெர்னாமா) -- 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் MyJalan செயலி மூலம் பெறப்பட்ட சாலைப் பழுது தொடர்பான புகார்களில் 95.83 விழுக்காட்டிற்கு பொதுப்பணி அமைச்சு K-K-R வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளது.
கிடைக்கப்பெறும் புகார்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்கக் கூடிய அமைச்சின் முயற்சியை இந்த அடைவு பிரதிபலிப்பதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
பொதுப்பணி அமைச்சு மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் சாலை தொடர்பிலான 13 ஆயிரத்து 451 புகார்களில் 12 ஆயிரத்து 890 புகார்களுக்கு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் வழி இத்தளம் இப்போது நாட்டின் சாலை பராமரிப்பு நிர்வாகத்தின் முதுகெலும்பாக உள்ளதை மெய்பிப்பதாகவும் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி கூறினார்.
''இதன் திறன் MyJalan 2.0 செயலி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் இன்னும் மேம்படுத்தப்படும். குறிப்பாக விவேக ஒருங்கிணைப்பு, நிகழ்நேர நிலை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பகுப்பாய்வு ஆகியவற்றை இச்செயலி வழங்கும். மேலும் சாலை பழுதுபார்ப்புகளை முன்கூட்டியே அல்லது விரைந்து திறன்மிக்க மேற்கொள்வதற்கும் துணை புரியும்.'' என்றார் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி
இன்று நடைபெற்ற அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்துடன் கூடிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சின் பணியாளர்களுக்கு இடையிலான சந்திப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு உரையாற்றினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)