நெகிரி செம்பிலான், டிசம்பர் 15 (பெர்னாமா) -- டிசம்பர் 2-ஆம் தேதி சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கான்-னில் உள்ள இரண்டு மாடி தரை வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஆறு கோடியே 25 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 638 கிலோகிராம் கஞ்சா பூக்களை அரச மலேசிய சுங்கத்துறை JKDM பறிமுதல் செய்தது.
பிற்பகல் மணி 3.50-க்கு நடந்த சோதனையில் 17 பொட்டல பெட்டிகளையும் கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் பச்சை தாவரப் பொருட்கள் அடங்கிய பல அலுமினியத் தகடுகளையும் தமது தரப்பு கண்டறிந்ததாக JKDM அமலாக்க நடவடிக்கைகளுக்கான துணைத் தலைமை இயக்குநர் சித்தி மாங் தெரிவித்தார்.
அவற்றுடன் எடைக் கருவி பதனிடும் கருவி என்று அந்நடவடிக்கையில் பறிமுதல் அனைத்து பொருட்களும் விசாரணைக்காக சுங்கத்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் அமலாக்கப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சித்தி கூறினார்.
''சோதனை செய்யப்பட்ட வீடு கஞ்சா பூக்களை பொட்டலமிடும் இடமாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அங்கு கஞ்சா பூக்களை அக்கும்பல் பெட்டிகளில் அடைத்து வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டனர். மேலும் அதிகாரிகளால் அறியமுடியாமல் இருப்பதற்கு படுக்கை விரிப்புகள் நிறைந்த பெட்டி. பெட்டியில் உள்ள விளக்கத்தின் அடிப்படையில், 'மைக்ரோஃபைபர் படுக்கை விரிப்பு' என்று குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அனைத்து பொட்டலங்களும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.'' என்றார் சித்தி மாங்
சுங்கத்துறையின் சோதனை நடவடிக்கையை முன்னதாகவே அக்கும்பல் அறிந்திருந்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)