பொது

மக்களின் நலன்களுக்கு அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்

17/12/2025 03:56 PM

கோலாலம்பூர், டிசம்பர் 17 (பெர்னாமா) -- மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து நம்பிக்கையையும் பொறுப்புகளையும் முழு நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

நல்லாட்சி கொள்கைகளுக்கு இணங்க மக்களின் நல்வாழ்வு, தேசிய நிலைத்தன்மை மற்றும் பொருளாதார செழிப்பு ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் நிர்வாகம் திறமையாகவும் திறம்படவும் இயங்குவதை உறுதி செய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மக்களின் கருத்துகளைக் கண்டறியவும் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றவும் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் களத்தில் இறங்கி சேவையாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் மாமன்னர் கலந்து கொண்டார்.

இஸ்தான நெகாராவில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிவும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃபும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)