கம்பொங் சுங்கை பாரு, டிசம்பர் 21 (பெர்னாமா) -- கோலாலம்பூர், கம்பொங் சுங்கை பாரு மறுமேம்பாட்டுத் திட்டத்தின் மேம்பாட்டாளர் நிறுவனம் வாக்குறுதியளிக்கப்பட்ட நேரத்திற்குள் புதிய குடியிருப்பு திட்டத்தை நிறைவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் சிலர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்களுக்குச் சரியான இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.
"எனவே, அவர்கள் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் அறிவித்தபடி, மார்ச் மாதத்தில் இது தொடங்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். எனவே மார்ச் மாதத்தில் இது தொடங்கினால், வாக்குறுதியளிக்கப்பட்டதை நிறைவு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், சுங்கை பாரு பகுதியில் வசிக்கும் பல குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துவிட்டனர். ஆனால், அவர்களுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. இழப்பீடாக அவர்கள் வீட்டை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், வீடு தயாராக இல்லாதபோது அது ஒரு பிரச்சனையாக மாறும்'', என்றார் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி.
ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், கம்பொங் சுங்கை பாருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நில உரிமையாளர்கள் தங்கள் பகுதிகளுக்கு மீண்டும் திரும்ப அனுமதிக்கும் வகையில் முதலில் இரண்டு குடியிருப்புப் பகுதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு கோலாலம்பூர் டத்தோ பண்டாரைத் தாம் கேட்டுக் கொண்டதாகத் திதிவாங்சா நாடாளுமன்ற உறுப்பினரான ஜொஹாரி கூறினார்.
கடந்த நவம்பர் 30ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய கம்பொங் சுங்கை பாரு மறுமேம்பாட்டுத் திட்டம் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)