பொது

நேம்வி விடுவித்து விடுதலை

22/12/2025 03:11 PM

கோலாலம்பூர், டிசம்பர் 22 (பெர்னாமா) -- உடலில் போதைப்பொருள் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து பிரபல பாடகர் நேம்வி என்றழைக்கப்படும் வீ மெங் சீ இன்று கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு விடுதலைச் செய்யப்பட்டார்.

நோயியல் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்ததால் தமது தரப்பு அக்குற்றச்சாட்டை மீட்டுக் கொண்டதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அம்ரித்பிரீத் கவுர் ரந்தாவ் தெரிவித்ததைத் தொடர்ந்து மஜிஸ்திரேட் எஸ். அருண்ஜோதி அம்முடிவைச் செய்தார்.

உத்தரவாதத் தொகையான இரண்டு ஆயிரம் ரிங்கிட்டை நேம்வியிடம் திருப்பத் தரவும் அருண்ஜோதி உத்தரவிட்டார்.

நோயியல் அறிக்கை எதிர்மறையாக இருந்ததால் நேம்வியை விடுவித்து விடுதலை செய்யும்படி அவரின் வழக்கறிஞர் ஜோஷுவா தே முன்னதாக வாதிட்டார்.

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி இரவு மணி 7.15 அளவில் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தின் கழிப்பறையில் நேம்வி அச்செயலைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 15(1)(a)இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மேற்போகாத கண்காணிப்பு விதிக்கப்படலாம்.

இருப்பினும், அக்டோபர் 22ஆம் தேதி மாலை மணி 4.30 அளவில் ஜாலான் கான்லேவில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் அறையில் 5.12 கிராம் எடையிலான EKSTASI வகை போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டை நேம்வி எதிர்கொண்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)