பொது

இரு நாட்களில் 4,433 போக்குவரத்து சம்மன்கள் வெளியீடு

25/12/2025 05:02 PM

ஜோகூர், 25 டிசம்பர் (பெர்னாமா) -- Op Krismas மற்றும் Op Ambang Tahun Baru சோதனை நடவடிக்கைகளின் முதல் இரு நாட்களில்  ஜோகூர் மாநில போலீஸ் மொத்தம் 4,433 போக்குவரத்து சம்மன்களை வெளியிட்டுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை பிற்பகல் மணி 12.30 வரையில் இந்த சம்மன்கள் வெளியிடப்பட்டன.

ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படும் இந்த இரண்டு நடவடிக்கைகளும் வரும் ஜனவரி முதலாம் தேதி வரை தொடரும் வேளையில், இதற்காக, மாநிலம் முழுவதும் 1,681 அதிகாரிகளும் போலீஸ் உறுப்பினர்களும் அவர்கள் ஒவ்வொரு நாளும் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபடுவதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஷாட் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக வாகனங்களில் மாற்றம் செய்வது, பதிவு எண் இல்லாதது, பதிவு எண்ணை மாற்றியமைப்பது, ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்ல் அந்த சம்மன்கள் வழங்கப்பட்டன. 

''சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா மட்டுமின்றி, இதர மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளின் வருகையினாலும் ஜோகூர் கவனம் பெறுகின்றது. அதனால்தான் நாங்கள் இந்த நடவடிக்கையைத் தொடங்கினோம். ஜோகூரில் குற்றங்களைத் தடுக்கவும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாதுகாப்பு உணர்வை உருவாக்க விரும்புகிறோம்,'' என்றார் அவர். 

ஜோகூரின், இஸ்கண்டார் புத்ரியில் நேற்று மாலை மணி ஐந்து தொடங்கி இரவு மணி 11 வரை மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதில், போலீசார் 52 மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 143 சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டன. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]