சிறப்புச் செய்தி

இளம் தலைமுறையையும் ஆன்மீக பாதைக்கு அழைத்துச் செல்லும் அருணகிரிநாதர் விழா

25/12/2025 04:33 PM

செந்தூல், 25 டிசம்பர் (பெர்னாமா) -- திருப்புகழ் பாடல்களால் தமிழ்க்கடவுள் கந்தப் பெருமானின் மகிமையை உலகிற்கு எடுத்துச் சென்ற அருணகிரிநாதரின் ஆன்மீக பயணத்தை நினைவுகூரும் வகையில் 2025-ஆம் ஆண்டு அருணகிரிநாதர் விழா 17-வது முறையாக இன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. 

இம்மாபெரும் அருளாளரின் பாடல்கள் வழி இளம் தலைமுறையையும் ஆன்மீக பாதைக்கு அழைத்துச் செல்வதே முருக பக்தியும் முத்தமிழும் சங்கமிக்கும் இப்பெருவிழாவின் முதன்மை நோக்கமாகும்.

இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாகத் திகழும் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்கள் வழிபாடாக மட்டுமல்ல, மாறாக வாழ்க்கைக்கான வழிகாட்டியாகத் திகழ்கின்றன. 

அவ்வழிகாட்டியை மெம்மேலும் பகிரும் வகையில், இளைஞர்கள் பலரின் பங்கேற்பே இவ்விழாவின் தனிச்சிறப்பு என்று அதன் ஏற்பாட்டாளரும் மலேசிய முருகபக்தி பேரவையின் தலைவருமான மருத்துவர் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் தெரிவித்தார். 

''திருப்புகழ் என்பது முருக வழிபாட்டில் ஒரு வேதத்தைப் போன்றது. முருகனிடம் பக்தர்கள் பேசக்கூடிய மொழியாகவும் திருப்புகழ் விளங்குகின்றது. அதனை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்விழா அமைந்துள்ளது. முருகன் இளைய தமிழ்க்கடவுள். முருகன் என்றாலே இளைஞன், இளமை, அழகு, தமிழ் என்று பொருள். முருகனுக்காக இளைஞர்கள் வருவது ஒன்றும் ஆச்சரியமில்லை,'' என்றார் அவர்.

தமது பத்தாம் வயதில் பள்ளியில் நடத்தப்பட்ட திருப்புகழ் மனனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறும் நோக்கத்துடன் மட்டும் அதனை மனனம் செய்த தாம், அதில் உள்ள ஆனந்தத்தையும் மகிமையையும் உணர்ந்ததை அடுத்து அதனூடே ஒன்றித்து வாழ தொடங்கிவிட்டதாக, இவ்விழாவில் சிறப்பு சொற்பொழிவாற்றிய பொற்கிழிக்கவிஞர் பேராசிரியர் சொ சொ மீனாட்சி சுந்தரம் கூறினார். 

''இன்றைக்கு நமக்கு நிறைய கவலைகள் உள்ளன. அருணகிரிநாதர் சொல்கிறார்; விதியையும் வெல்லாம். முருகப் பெருமானின் காலில் விழுந்துவிடு. எல்லாவற்றையுன் அவர் பார்த்துக்கொள்வான் என்று. பிரம்மா எழுதியதைக்கூட முருகனின் திருவடி அழித்துவிட்டது என்று அருணகிரிநாதர் சொல்கிறார். என்ன கவலை வந்தாலும் அவனிடம் சொல்லிவிடு, அவன் பார்த்துக்கொள்வான் என்று சொல்கிறார். இதன்வழி, நம்முள் ஒரு வலிமை பிறக்கும். அது நம்மை காப்பாற்றும்,'' என்றார் அவர்.

முருக பக்தி வழிபாடு வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் நேர்மறை விளைவுகள் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. 

''பெரியவர் ஒருவரைப் பார்த்து நான் கைகூப்பினேன் என்றால், அது அவருக்கானது அல்ல. அவருள் இருக்கும் முருகனுக்கு. உள்ளே கடவுளைப் பார்த்தால்தான் வெளியேயும் அவரை பார்க்கலாம். மனிதரிடம் பார்த்தால்தான் மலை மேல் பார்க்கலாம். மனிதரிடம் பார்க்கவில்லை என்றால் நீங்கள் மலையேறி பயனில்லை. எனவே, நமது வாழ்க்கை முறையோடு ஒன்றித்தது பக்தி,'' என்று அவர் வர்ணித்தார்.

இதனிடையே, அருணகிரிநாதர் விழாவில் கலந்து கொண்ட  பக்தர்கள் சிலர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்

''அருணகிரிநாதர் முருகனின் அருள் பெற்ற ஒரு சித்தர். அவரைப் பற்றி தெரிந்துகொள்வதால் என்னுடை சமய அறிவு மெம்மேலும் வளரும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளேன்,'' என்று விஜயகுமார் பாண்டியன் கூறினார்.

''பல நேரங்களில் பல பிரச்சனைகள் நம்மை நெருக்கும்போது ஆன்மீகமே நமக்கான ஒரு தெளிவை கொடுக்கும். இறைவன் என்ற நிலையையும் கடந்து ஒரு தோழனாக, ஒரு குழந்தையாக ஓர் உயிராக முருகன் என்னுள் வசிக்கிறார். என் சுகதுக்கம் அனைத்திலும் அவர்தான்,'' என்று சிவசங்கரன் ராமு தெரிவித்தார்.

ஆன்மீகமும் பண்பாடும் இணையும் இந்நிகழ்ச்சி, சமூகத்தில் நல்ல சிந்தனையையும் ஒற்றுமையையும் வளர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்,

மலேசிய முருகபக்தி பேரவையின் ஏற்பாட்டில் நாட்டின் பல முதன்மை நகரங்களில் இவ்விழா நடைபெற்று வந்த நிலையில், கோலாலம்பூர் மாநாகரில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். 

செந்தூல், செட்டியார் மண்டபத்தில் காலை மணி எட்டிலிருந்து நண்பகல் மணி ஒன்று வரை நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 800 பேர் கலந்துகொண்டு நன்மையடைந்தனர். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]