கோலாலம்பூர், 29 டிசம்பர் (பெர்னாமா) -- இராணுவ கொள்முதல் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ, தற்காப்பு அமைச்சு, MINDEF-இல் உள்ள இராணுவ அலுவலகத்திலும், மூத்த இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டிலும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் சோதனையிட்டது.
விசாரணைக்குத் தொடர்புடைய ஆவணங்களையும் ஆதாரங்களையும் பெறுவதற்காக, சில நிறுவனங்களிலும் இன்று சோதனை நடத்தப்பட்டதாக, எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
சந்தேக நபர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஆறு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதோடு, 2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 17(அ)-வின் கீழ் விசாரணை அறிக்கையும் திறக்கப்பட்டிருப்பதாக, அஸாம் பாக்கி கூறினார்.
இந்நிலையில், சோதனை நடவடிக்கையின் போது ரொக்கப் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
மாறாக, விசாரணைக்குத் தொடர்புடையதாக நம்பப்படும் விலை உயர்ந்த கடிகாரங்கள் மற்றும் கைப்பைகள் உள்ளிட்ட ஆடம்பர பொருள்களை எஸ்.பி.ஆர்.எம் பறிமுதல் செய்ததாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க சென்றிருக்க வேண்டிய அச்சந்தேக நபர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)