சிறப்புச் செய்தி

ஈப்போவில் அருணகிரிநாதர் விழா

01/01/2026 08:18 PM

ஈப்போ, ஜனவரி 01 (பெர்னாமா) --  திருப்புகழ் இசை, சொற்பொழிவு மற்றும் நாட்டிய நாடகங்கள் வாயிலாக முத்தமிழும் முருக பக்தியும் சங்கமித்த ஆன்மீகப் பெருவிழா இன்று பேராக், ஈப்போவில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவைக் காணப் பெரும் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

ஈப்போ உட்படப் பல்வேறு நகரங்களில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் அருணகிரிநாதர் விழா பெரும் எழுச்சியுடன் தொடர்ச்சியாக அரங்கேறி வருவதற்கான முக்கிய காரணங்களை மலேசிய முருகபக்தி பேரவையின் தலைவருமான டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் விவரித்தார்.

வரும் ஜனவரி முதலாம் தேதி பத்துமலை திருத்தலத்துடன் இணைந்து பல்வேறு சமய இயக்கங்கள் முருகன் ஆலயங்கள் உட்பட இவ்வேல் வழிபாட்டை முன்னெடுக்கவுள்ளதாக டாக்டர் ஜெயபாலன் தெரிவித்தார்.

மேலும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை ஒவ்வோர் இல்லத்திலும் பாடுவதோடு அதனை இளைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்று காலை மணி 9 அளவில் ஜாலான் லகாட் பகுதியில் அமைந்துள்ள அரசு மரத்தடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஞானவேலும் அருணகிரிநாதர் பெருமானும் மேளதாளங்களுடன் அருள் மிகு தண்டாயுதபாணி ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஊர்வலத்தில் கண்கவர் கிராமிய நடனக் கலைகளும் இடம்பெற்றன. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)