உலகம்

வெனிசுலா அதிபரை ஏற்றி வந்த விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியது

04/01/2026 04:30 PM

அமெரிக்கா, 04 ஜனவரி (பெர்னாமா) -- சனிக்கிழமை அதிகாலை வெனிசுலா மீது அமெரிக்கா தரை வழி மற்றும் விமானத் தாக்குதகளை நடத்தி, அதன் நீண்டகால அதிபர் நிகோலஸ் மடுரோ-வின் அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, அவரை ஏற்றி வந்த விமானம் சனிக்கிழமை பிற்பகல் நியூயார்க்கில் தரையிறங்கியது.

மடுரோ-வை ஏற்றி வந்ததாக நம்பப்படும் அந்த விமானத்திலிருந்து மாலை மணி சுமார் 5:25க்கு, காவலில் இருந்த ஒருவர் வெளியேற்றபடுக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நியூயார்க்கிலிருந்து வடமேற்கே சுமார் 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்திவர்ட் ஏ.ஐ தேசிய பாதுகாவலர் தளத்திற்கு ஒரு விமானம் வந்தடைவதையும், அது தரையிறங்கிய பிறகு ஃப்.பி.ஐ மற்றும் பல அமெரிக்க பணியாளர்கள் விமானத்தில் ஏறுவதையும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

CNN, Fox News மற்றும் MS Now உள்ளிட்ட தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் விமானத்தில் இருந்து இறங்கிய நபர் நிகோலஸ் மடுரோ என்று குறிப்பிட்டுள்ளன.

இதனிடையே, மடுரோ பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் அமெரிக்கப் படைகளை அனுப்புவது உட்பட, தற்போதைக்கு அந்நாட்டை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் உறுதியளித்தார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்கா வெனிசுலாவை வழிநடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

''பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான மாற்றத்தைச் செய்ய முறையில் முடிந்த வரை நாங்கள் அந்நாட்டை வழிநடத்துவோம். எனவே, வேறு யாரும் இதில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. கடந்த நீண்ட காலமாக நாங்கள் கொண்டிருந்த அதே சூழ்நிலையையே நாங்கள் இப்போது கொண்டுள்ளோம். எனவே, பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான மாற்றத்தைச் செய்யக்கூடிய வரை நாங்கள் நாட்டை வழிநடத்துவோம். அது நியாயமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதுவே நமது நோக்கம்,'' என டோனல்ட் டிரம்ப் கூறினார்.

வெனிசுலாவின் எரிசக்தி உள்கட்டமைப்பை கையகப்படுத்தி, முதலீடு செய்ய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை அங்கீகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், வெனிசுலா எண்ணெய் மீதான அனைத்து தடைகளும் முழு அமலில் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

இராணுவ நடவடிக்கையில், அமெரிக்கா வான், தரை மற்றும் கடல் படைகளை ஏவிய வேளையில், வெனிசுலா மீது இரண்டாவது தாக்குதலை நடத்தவும் தயாராக உள்ளது.

எனினும், அது அவசியமில்லை என் குறிப்பிட்ட டிரம்ப் , தேவைப்பட்டால், அமெரிக்கா அந்நாட்டின் மீது இரண்டாவது மற்றும் மிகப் பெரிய தாக்குதலுக்கு தயாராக உள்ளதாக கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)