பிரயாக்ராஜ், ஜனவரி 04 (பெர்னாமா) -- இந்தியாவின் வருடாந்திர மகா மேளா அல்லது மகாமகம் மற்றும் பௌஷ் பூர்ணிமா கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை காலை பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
இவ்விழாவிற்குப் பாரம்பரிய உடையில் வருகை புரிந்த பக்தர்கள் விளக்குகளை ஏற்றி பனி உருகும் ஆற்றில் புனித நீராடலுக்குத் தயாராக இருந்ததைக் காண முடிந்தது.
மேலும், பக்தர்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தும் மந்திரங்களை ஓதியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திரிவேணி சங்கமத்தில் நீராடினால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பதோடு நோய்களும் குணமாகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
மேலும், புனித நீரில் குளித்த பின்னர் தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் காணிக்கையும் செலுத்துகின்றனர்.
இவ்விழாவில் கலந்து கொள்ள காலை மணி 10க்கே சுமார் ஒன்பது லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அவ்விழாவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மட்டும் 20 முதல் 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு இக்கொண்டாட்டம் ஜனவரி 3 முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இக்காலக்கட்டத்தில் 15 கோடி பக்தர்கள் அங்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அதிக கூட்டத்தை நிர்வகிக்க உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் விரிவுபடுத்தியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)