கோலாலம்பூர், ஜனவரி 04 (பெர்னாமா) -- கராகஸ்ஸில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையால் வெனிசுவேலா அதிபர் நிக்கோலசு மதுரோ மற்றும் அவரின் மனைவி கைது செய்யப்பட்டிருப்பது வழக்கத்திற்கு மாறான செயலாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
வெனிசுலாவின் அண்மைய நிலவரங்களை மிகுந்த கவலையுடன் நன்கு கவனித்து வருவதாகவும் அமெரிக்காவின் நடவடிக்கை அனைத்துலகச் சட்டத்தை மீறுவதைத் தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இறையாண்மை கொண்ட ஓர் அரசுக்கு எதிராகச் சட்டவிரோதமாகப் பலாத்காரத்தைப் பயன்படுத்துவதாகவும் அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மதுரோவும் அவரின் மனைவி சிலியா ஃப்ளோர்ஸ்ஸும் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் வலியுறுத்தி உள்ளார்.
அதோடு, வெளிப்புற தலையீடு மூலம் பதவியில் இருக்கும் அரசாங்கத் தலைவரை வலுக்கட்டாயமாக நீக்குவது ஆபத்தான முன்னுதாரணத்தைக் காட்டுவதாக அவர் எச்சரித்தார்.
இது மாநிலங்களுக்கு இடையே அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் உள்ள அடிப்படைக் கட்டுப்பாடுகளை சீர்குலைத்து அனைத்துலக ஒழுங்கை ஆதரிக்கும் சட்ட கட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதாக அன்வார் வருத்தம் தெரிவித்தார்.
வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் வெளிப்புறத் தலையீடு இல்லாமல் அதன் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.
மேலும், வரலாற்று சான்றுகளின்படி வெளிப்புற சக்தியின் மூலம் திணிக்கப்படும் திடீர் தலைமைத்துவ மாற்றங்கள் பெரும்பாலும் நன்மையைவிட அதிக தீமையையே கொண்டுவருகின்றன.
குறிப்பாகக் நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் மோசமான சமூக நெருக்கடியால் ஏற்கனவே போராடி வரும் ஒரு நாட்டில் இது பாதகத்தையே ஏற்படுத்தும் என்று பிரதமர் விவரித்தார்.
எனவே, இவ்விவகாரத்தில் அனைத்துலகச் சட்டத்தை நிலைநிறுத்துவதிலும் நாடுகளுக்கு இடையிலான அமைதியான உறவுகளுக்கு அவசியமான அடித்தளங்களாக இறையாண்மையை மதிப்பதிலும் மலேசியா உறுதியாக உள்ளதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)