அமெரிக்கா, 19 நவம்பர் (பெர்னாமா) -- காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப் பரிந்துரைத்துள்ள அமைதி திட்டத்தித்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் நேற்று அங்கீகாரம் அளித்திருந்தது.
ஆனால், அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட அந்த தீர்மானத்தை தாங்கள் நிராகரிப்பதாக ஹமாஸ் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஹமாஸ், பிற பாலஸ்தீன தரப்புகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் ஆகியவை அந்நாட்டு மக்களின் எதிர்ப்பு மற்றும் தற்காப்பு உரிமையைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று ஹமாஸ் தனது சமூக ஊடகத்தில் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் அமெரிக்காவின் 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எனினும், காசாவிற்குத் துருப்புக்களை அனுப்புவது குறித்து பரிசீலிக்கும் நாடுகளுக்கு உறுதியளிப்பதற்கும் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பைச் சட்டப்பூர்வமாக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய டிரம்ப் பரிந்துரைத்த அமைதி திட்டத்தை அங்கீகரிக்கவும் அனைத்துலக அளவில் காசாவில் அமைதி பணியை மேற்கொள்ளவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றம் திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தியது.
அந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 14 வாக்குகள் பெறப்பட்ட வேளையில் எதிராக எந்தவொரு வாக்கும் பதிவாகாத நிலையில் அத்தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)