உலகம்

வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல் - ஐ.நா. கண்டனம்

06/01/2026 01:14 PM

நியூயார்க், 06 ஜனவரி (பெர்னாமா) -- வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா-வின் பாதுகாப்பு மன்றம் நேற்று அவசரக் கூட்டத்தை நடத்தியது.

வெனிசுலா மீதான தாக்குதல்கள் மற்றும் அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தது குறித்து ஐ.நா. பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கையினால், வெனிசுலா நாட்டின் நிலைத்தன்மை மிகவும் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இதனால், வட்டார நாடுகளுக்கு இடையிலான உறவிலும் விரிசல் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கை, வெனிசுலா மக்கள் மற்றும் இராணுவப் பகுதிகளில் நடத்தப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பு என்று குட்டெரஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த தாக்குதல்கள் வழி, அமெரிக்கா ஐ.நா. சாசனத்தை மீறியிருப்பதாகவும் அவர் சாடியிருக்கிறார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இந்நிலையில், நிக்கோலஸ் மதுரோவும் அவருடைய மனைவியும் அமெரிக்க இராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)