இஸ்தான்புல், ஜனவரி 09 (பெர்னாமா) -- மலேசியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் புதிய வாய்ப்பாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அக்குடியரசிற்கான பயணம் அமைந்துள்ளது.
அவ்விரு நாடுகளைச் சேர்ந்த 46 முதன்மை தொழில்துறை நிறுவனங்களுடன் நடைபெற்ற வட்டமேசைக் கூட்டத்தின் போது, பரஸ்பர நன்மைக்காக சந்தையை விரிவுபடுத்துவதில் ஒவ்வொரு நிறுவனங்களும் ஆர்வம் காட்டியதாக, மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகம், MATRADE-இன் தலைமை நிர்வாக அதிகாரி அபு பகார் யூசோப் கூறினார்.
''இது துருக்கியைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் பிரதமர் மற்றும் MITI அமைச்சரிடம் மலேசியாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான தேவை குறித்து நேரடியாக கேள்வி எழுப்பக்கூடிய ஒரு சந்திப்பு,'' என அபு பகார் யூசோப் கூறினார்.
துருக்கிக்கு பிரதமர் மேற்கொண்டிருக்கும் மூன்று நாள்கள் அலுவல் பயணத்தின் ஓர் அங்கமாக, நேற்று அச்சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ செரி ஜொஹாரி அப்துல் கானி-யும் அந்த வட்டமேசை சந்திப்பில் கலந்து கொண்டார்.
MATRADE மற்றும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம், MIDA இணைந்து ஏற்பாடு செய்த அக்கூட்டத்தில், பாதுகாப்பு தொழில்நுட்ப பொறியியல் மற்றும் வர்த்தக நிறுவனம், துருக்கி விண்வெளி தொழில் நிறுவனம் மற்றும் ASELSAN அசெல்சான் போன்ற முக்கிய தொழில்துறை நிறுவனங்கள் உட்பட மலேசியாவைச் சேர்ந்த ஏழு நிறுவனங்கள் கலந்து கொண்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)