| BREAKING NEWS | Super League: PDRM FC 1-6 Negeri Sembilan FC | |
ஜோகூர் பாரு, 13 மார்ச் (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத் தேர்தல் முன்னதாகவே நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி வதந்திகள் அதிகமாகி வந்தாலும், அது தற்போது தமது முன்னுரிமை அல்ல என்று மாநில மந்திரி புசார் ஓன் ஹஃபிஸ் காஸி கூறினார்.
மாறாக, தற்போது தமது கவனம், மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி, அவர்களின் நலனுக்காக பாடுபடவிருப்பதாக ஜோகூர் மாநில அம்னோ தலைவருமான அவர் எடுத்துரைத்தார்.
மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்காலம், 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் முடிவடையும் என்று மாச்சாப் சட்டமன்ற உறுப்பினருமான ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.
"நான் இன்னும் பதவியில் நிலைத்திருக்க ஓராண்டிற்கு மேலாக உள்ளது. எனவே, மக்களின் நலைனைப் பாதுகாக்க தொடர்ந்து சேவை செய்வதே எனது பணி. தேர்தலுக்காக நாங்கள் வேலை செய்யவில்லை, ஆனால் நாங்கள் வேலை செய்கிறோம், ஏனெனில் இது மக்கள் மீதான கடமையும் பொறுப்பும் ஆகும்."
"ஆக, மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதே முதன்மை ஆகும். நாங்கள் இன்னும் அரசாங்கமாக இருக்கும் வரையில், அது எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும்," என்று அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.
சில அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட இடங்களில் போட்டியிடும் தங்கள் விருப்பத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜோகூர் மாநிலத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆருடங்கள் வலுத்து வருகின்றன.
அண்மையில், கெஅடிலான் மற்றும் அமானா ஆகிய கட்சிகள், வரும் மாநிலத் தேர்தலில் போட்டியிட தங்கள் வேட்பாளர்களுக்கு தலா 28 மற்றும் 20 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தன.
இதனிடையே, ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணியும், ஜோகூர் மடானி, தொகுதி பங்கீட்டு செயற்குழு, பிரச்சனைகள் மற்றும் தகவல் தொடர்பு செயற்குழு மற்றும் மத்திய அமைச்சர்கள் ஒருங்கிணைப்பு செயற்குழு உள்ளிட்ட நான்கு வியூக செயற்குழுக்களை அமைத்துள்ளது.
வரும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள ஒத்துழைப்பு அல்லது தொகுதிப் பங்கீடு குறித்து கட்சி இன்னும் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்று ஜோகூர் மாநில அம்னோ துணைத் தலைவரான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் மஸ்லான் கூறியிருந்தார்.
கடந்த ஜோகூர் மாநில தேர்தலில், போட்டியிட்ட 56 தொகுதிகளில், 40-ஐ தேசிய முன்னணி கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.
நம்பிக்கைக் கூட்டணி, 12 தொகுதிகளும் பெரிக்காத்தான் நேஷனல் மூன்று தொகுதிகளும் மூடா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
ஓன் ஹஃபிஸ் 6,543 வாக்குகள் பெரும்பான்மையில் மாச்சாப் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)