உலகம்

பிப்ரவரி 15-க்குள் வங்காளதேசத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்

14/02/2026 04:17 PM

வங்காளதேசம், 14 பிப்ரவரி (பெர்னாமா) -- வங்காள தேசியவாத கட்சி BNP, அதன் நீண்டகால போட்டிக் கட்சியான லீகா அவாமி தலைமையிலான அரசாங்கத்தை 2024ஆம் ஆண்டு கவிழ்த்ததைத் தொடர்ந்து, முதல் முறையாக வெற்றி பெற்று நாளை புதிய அரசாங்கத்தை அமைக்கவிருக்கிறது.

பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் வங்காளதேசத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று கூறிய BNP தலைமைச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், அனைத்து கட்சிகளுடன் ஒன்றிணைந்து BNP நாடாளுமன்றம் செல்லும் என்று தெரிவித்தார்.

BNP கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பரில் அவரது தாயார் மற்றும் வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலேடா ஜியாவின் மரணத்திற்குப் பின்னர், அவர் கட்சித் தலைமைப் பொறுப்பேற்றார்.

முன்னதாக தேர்தலுடன் இணைந்து, கடந்த அக்டோபரில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஜூலை சாசனம்' மீதான வாக்கெடுப்பும் அங்கு நடைபெற்ற வேளையில், மக்கள் இதற்கு தங்களின் நிறைவான ஆதரவை வழங்கி இருந்தனர்.

பிரதமரின் பதவிக்கால வரம்புகள், அதிபருக்கான அதிகாரங்களை விரிவுபடுத்துதல், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், பெண்களின் அங்கத்துவத்தை அதிகரித்தல் மற்றும் மனித உரிமைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நிர்வாகத்தை மறுசீரமைக்க 80-கும் மேற்பட்ட திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)