விளையாட்டு

மலேசியக் கிண்ணம்; அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது ஜே.டி.தி

26/02/2026 01:54 PM

மலாக்கா, 26 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசியக் கிண்ண காற்பந்து போட்டியில், நடப்பு வெற்றியாளரான ஜோகூரின் ஜே.டி.தி கணித்தது போலவே அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. 

நேற்றிரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜே.டி.தி 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் மலாக்கா எஃப்.சி-ஐ வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தேர்வானது. 

மலக்கா, குருபோங்கில் உள்ள ஹங் ஜெபாட் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்திலேயே ஜே.டி.தி தனது முதல் கோலைப் போட்டது. 

சிஸ்கோ முனோஸ் தலைமையில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜே.டி.தி தனது இரண்டாவது கோலை ஜைரோ டா சில்வா வழி 30-வது நிமிடத்தில் போட்டது. 

அவ்வணியின் மூன்றாவது கோல் இரண்டாம் பாதி ஆட்டத்தில் அடிக்கப்பட்டது. 

சொந்த அரங்கில் விளையாடிய மலாக்கா எஃப்.சி-இன் ஒரே கோல் ஆட்டத்தின் இறுதியில் போடப்பட்டது. 

முதல் காலிறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் சொந்த இடத்தில் வெற்றி அடைந்த ஜே.டி.தி,  இந்த ஆட்டத்துடன் 8-1 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

அரையிறுதி ஆட்டத்தில் அது கே.எச் சிட்டி எஃப்.சி-ஐ எதிர்கொள்ளும். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]