கோலாலம்பூர், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- இன்று அதிகாலை கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு வெளிநாட்டவரை தடுக்க முயன்ற மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.
சந்தேக நபர் தாக்கியதில் அந்த அதிகாரியின் இடது கால் முறிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக குடிநுழைவுத் துறையின் அமலாக்க பிரிவு இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.
அச்சம்பவத்தை தொடர்ந்து, அந்த வெளிநாட்டவர் தப்பிச் சென்றதாகவும் அவர் கூறினார்.
''இந்த நபர்கள் மிகவும் முரட்டுத்தனமாகவும், ஆக்ரோஷமாகவும் நடந்து கொண்டு அந்த சூழ்நிலையில் தப்பிக்க முயன்றபோது, அவர்கள் அதிகாரியைத் தாக்கி, படிக்கட்டுகளில் இருந்து கீழே விழச் செய்தனர். இதனால் அவரது கால் முறிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பரிசோதனைக்காக அந்த அதிகாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்,'' என்றார் அவர்.
அதிகாலை நிறைவு பெற்ற சோதனை நடவடிக்கைக்கு பின்னர் பஸ்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அதிகாலை மணி 3.1-க்கு தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில் 85 அதிகாரிகள் பங்கேற்றனர்.
மொத்தம் 98 பேர் சோதனை செய்யப்பட்டநிலையில், பல்வேறு குடிநுழைவு குற்றங்களுக்காக 48 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்ட காலகெடுவைவிட கூடுதலாக தங்கியிருத்தல் மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களை கொண்டிருக்காதது ஆகிய குற்றங்கள் அடையாளம் காணப்பட்டன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]