சிலாங்கூர், 14 பிப்ரவரி (பெர்னாமா) -- டத்தோ ஸ்ரீ ஹம்சாவுக்கு பதிலாக புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று, பெர்சத்து பொது செயலாளர் டத்தோ ஸ்ரீ முஹமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.
லாரூட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சா, இனி பெர்சத்து கட்சியில் பதவி வகிக்காததால், இந்த விவகாரம் குறித்து ஆராயப்படும் என்று அஸ்மின் அலி கூறினார்.
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டொழுங்கு வாரியத்திடம் மேல்முறையீடு செய்ய ஹம்சாவுக்கு 14 நாள்கள் அவகாசம் உள்ளதாக அவர் மேலும் விளக்கினார்.
''காரணம் அவர் இனி கட்சி உறுப்பினராக இல்லை. கட்டொழுங்கு வாரியத்தின் நேற்றைய முடிவின்படி, அவரது உறுப்பினர் உரிமைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன,'' என்றார் அவர்.
சனிக்கிழமை, சிலாங்கூர், புக்கிட் டமான்சாராவில் உள்ள பெர்சத்து கட்சி தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசினின் இல்லத்தில் நடைபெற்ற அக்கட்சியின் சிறப்பு உச்ச மன்றக் கூட்டத்திற்கு பின்னர், அஸ்மின் அலி செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)