கோலாலம்பூர், 15 பிப்ரவரி (பெர்னாமா) -- பண்டிகைக் காலத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உயிரிழப்பு விபத்துகளின் விகிதத்தைக் குறைப்பதற்கும் இன்று அதிகாலை கோலாலம்பூரைச் சுற்றி நடத்தப்பட்ட Ops Selamat 25 சோதனை நடவடிக்கையின் வழி பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக மொத்தம் 820 சம்மன்கள் வெளியிடப்பட்டன.
சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய இச்சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகிய குற்றங்களுக்காக 18 முதல் 41 வயதுடைய எழுவர் கைது செய்யப்பட்டதாக, கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை, ஜே.எஸ்.பி.தி இயக்குநர் ஏ.சி.பி முஹமட் சம்சுரி முஹமட் இசா தெரிவித்தார்.
தொடக்கக்கட்ட சிறுநீர் பரிசோதனையில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் கஞ்சா மற்றும் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், அதிகமான சத்தத்தை எழுப்பும் குற்றத்திற்காக 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 60-இன் கீழ் 73 மோட்டார் சைக்கிள்களும் 10 கார்களும் உட்பட 83 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள், அதிக சத்தங்களை உருவாக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்ததாக ஏ.சி.பி முஹமட் சம்சுரி கூறினார்.
இச்சோதனை நடவடிக்கையில், ஜே.எஸ்.பி.தி பிரிவைச் சேர்ந்த 100 அதிகாரிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)