ஜார்ஜ்டவுன், பிப்ரவரி 21 (பெர்னாமா) -- மலேசிய இராணுவப் படை, ஏடிஎம் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தனது மகனின் மரணம் குறித்து எவ்விதமான ஊகங்களையும் அனுமானங்களையும் வெளியிடுவதை நிறுத்துமாறு மறைந்த இராணுவப்படை உறுப்பினர் கே. இந்திரனின் தாயார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
நான்கு பிள்ளைகளில் மூத்தவரான இந்திரனின் மரணத்தில் பகடிவதை அல்லது துன்புறுத்தியத்திற்கான கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் பிரேதப் பரிசோதனையிலும் அவர் உடலில் எவ்வித காயங்களும் காணப்படவில்லை எனவும் 52 வயதான தாயார் எஸ். உஷா தெரிவித்தார்.
தமது மகன ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்ததும் ஏதோ மோசமான சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று முதலில் தாம் நினைத்ததாக உஷா கூறினார்.
ஆனால், மகனைச் சென்று பார்த்தபோது அவரின் உடல் காயங்கள் ஏதுமின்றி சாதாரண நிலையில் இருந்தது.
அதன் பொருட்டு, அவர் எவ்வித பகடிவதை சம்பவத்திற்கும் ஆளாகவில்லை என்று உஷா தெளிவுபடுத்தினார்.
அதேவேளையில், மகனின் மரணம் குறித்து தெளிவான விசாரணை முடிவுகள் கிடைக்கும் வரையில் காத்திருக்குமாறு பொதுமக்களை தாம் கேட்டுக் கொள்வதாகவும் உஷா குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்திரனின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய குறிப்பிட்ட சோதனைகள் உட்பட மேலும் பல உள் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், இவ்விசாரணை துல்லியமாக நிறைவுபெறுவதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை அவகாசம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
தம் மகன் இராணுவத்தில் இணைந்த போது அவருக்கு எவ்வித நோயும் கண்டிருக்கவில்லை என்பதால் அவரின் இழப்பு அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் முகாமின் நடவடிக்கை குறித்து தமக்கு தினமும் அழைத்து தகவல் தெரிவித்த மகனின் மரணத்தை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் உஷா தெரிவித்தார்.
சீருடை அணிவோரில் குறிப்பாக இராணுவத்தில் கடுமையான பயிற்சி பெறுவது இயல்பான ஒன்று என்றாலும், அதை பகடிவதையாக கோடிகாட்ட முடியாது.
இந்திரனும் ஓர் இராணுவக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், மறைந்த அவரது தந்தை அரச மலேசிய ஆகாயப் படையில் உறுப்பினராகப் பணியாற்றியவர் எனும் உஷா கூறினார்.
முன்னதாக ஒரு முறை தாம் பெற்ற பயிற்சி கடுமையானதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்ததாகக் கூறியிருந்த இந்திரன், இருப்பினும் அது தமது சுயமீள்திறனை வளர்ப்பதற்கான ஒரு செயல்முறையாக தாம் ஏற்றுக் கொண்டதாக மகன் தம்மிடம் கூறியதாக உஷா தெரிவித்தார்.
இதனிடையே, இந்திரனின் உடலை ஏற்றி வந்த இராணுவ வாகனம் பின்னிரவு மணி 1.45-க்கு, அவரின் வீட்டு வளாகத்திற்குச் சென்றடைந்தது.
வீட்டில் நடைபெற்ற இறுதி அஞ்சலிக்குப் பின்னர் பிற்பகல் மணி 2 அளவில் பத்து லஞ்சாங் இந்திய கல்லறையில் உள்ள அவரது தந்தையின் கல்லறைக்கு அருகில் இந்திரனின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.
மரணமடைந்த இந்திரன் அரச மலேசிய ஆகாயப் படை விமானியாக இருந்த அமரர் மேஜர் சி. காயாம்புவின் மகன் ஆவார்.
2016-ஆம் ஆண்டு அவர் செலுத்திய Beechcraft B200T ரக விமானம், சுபாங் இராணுவப் படைத் தளத்திலிருந்து புறப்பட்டு பினாங்கு பட்டர்வொர்த் விமானப் படைத் தளத்தின் அருகே விபத்துக்குள்ளான சம்பவத்தில் காயாம்பு உயிரிழந்தார்.
22 வயதுடைய இந்திரன் பகாங், குவாந்தான் Batu 10-வில் உள்ள இராணுவ முகாமில் முதலாவது படைப்பிரிவில் பயிற்சி பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 18-ஆம் தேதி பயிற்சி முகாமில் மயங்கிய நிலையில் Tengku Ampuan Afzan மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)