பொது

பதவியை தவறாகப் பயன்படுத்திய திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் கைது

22/02/2026 03:44 PM

திரெங்கானு, 22 பிப்ரவரி (பெர்னாமா) --  ஜி.எல்.சி எனப்படும் மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் இரு பிள்ளைகளைப் பணியமர்த்துவதற்காக தமது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரை திரெங்கானுவின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.

60 வயதுடைய அவ்வாடவர், இன்று காலை மணி 11.15 அளவில் கெமாமான் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாக, தனது அதிகாரப்பூர்வ டிக் டாக் கணக்கில் மாநில எஸ்.பி.ஆர்.எம் அறிவித்திருந்தது

சம்பந்தப்பட்ட அவ்வாடவர் 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் இச்செயலைப் புரிந்ததாக தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

திரெங்கானுவில் உள்ள ஒரு மாவட்டத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றிருக்கும் அவ்வாடவர் தமது இரு பிள்ளைகளையும், மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த இரண்டு துணை நிறுவனங்களில் பணியமர்த்த, ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையிலும் தமது பதவியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

இவ்விவாகரம் குறித்து திரெங்கானு மாநில எஸ்.பி.ஆர்.எம் இயக்குநர் ஹஸ்ருல் ஷஸ்ரின் அப்துல் யஹிட்டை தொடர்பு கொண்ட போது ஆட்சிக்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 23-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு சந்தேக நபர் மீது விரைவில் குற்றம் சாட்டப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)