பொது

ஏ.ஆர்.டி தொடர்பில் மலேசிய அரசாங்கம் அவசரம் காட்டாது - அன்வார்

24/02/2026 04:11 PM

ஜாலான் பார்லிமன், 24 பிப்ரவரி (பெர்னாமா) --  மலேசியா-அமெரிக்கா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம், ஏ.ஆர்.டி தொடர்பில் மலேசியாவின் நிலைப்பாட்டை தீர்மானிப்பதில் அரசாங்கம் அவசரம் காட்டாது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் மலேசியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு அம்சங்களை ஆராய்வது உட்பட ஏ.ஆர்.டி குறித்த முன்னேற்றங்களை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''EAPA இன் பிரிவு 122 ஐ, அதிபர் பயன்படுத்தலாம். எனவே அவர்களின் மாநாடு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்குமா அல்லது உடன்படுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆதலால் புதிய உலகளாவிய வரியின் மீதான இந்த நிர்வாக உத்தரவு நெருக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டும், மேலும் மலேசியாவின் பொருளாதார நலன்களின் கண்ணோட்டத்தில் அது பார்க்கப்பட வேண்டும்'', என்றார் அவர்.

இன்று, மக்களவையில், உலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரொசொல் வாஹிட் எழுப்பிய கேள்விக்கு அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

அமெரிக்க நிர்வாக முடிவின் முன்னேற்றங்கள் மற்றும் தாக்கங்களை ஆராய அரசாங்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

குறிப்பாக மலேசியா-அமெரிக்க இருதரப்பு உறவின் மீதான அதன் மதிப்பு 36 ஆயிரத்து 750 கோடிரிங்கிட் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவிற்கு 150 நாள்களுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று விளக்கிய பிரதமர், இது மறைமுகமாக மலேசியாவிற்கு தற்காலிகமாக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)