பொது

பிரதமருடனான சந்திப்பின் போது MITI-இன் முக்கிய விவகாரங்கள் விவாதிப்பு

24/02/2026 04:23 PM

கோலாலம்பூர், 24 பிப்ரவரி (பெர்னாமா) --  நாட்டிற்குள் முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டு தேவைகளை ஆதரிக்க வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களை முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI இன்று, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நடத்திய சந்திப்பின்போது விவாதித்தது.

தொழில்துறையில் உள்ள முதன்மை சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இன்று நடைபெற்ற MITI-இன் உயர் நிர்வாக கூட்டத்திற்கு டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையேற்றார்.

சந்திப்பின் போது பிரதமரிடம் எழுப்பப்பட்ட விவகாரங்களை அவர் கவனத்தில் கொண்டதாகவும், அமைச்சின் கொள்கைகளைச் செயல்படுத்துவதை வலுப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளைப் பரிசீலிப்பதாகவும், MITI அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறினார்.

“இந்த சந்திப்பின் மூலம் இந்த அமைச்சுக்கு நாங்கள் என்ன பிரச்சனைகளை தெரிவிக்க விரும்புகின்றோம் என்பதை அவர் அறிந்து கொள்ள விரும்புகின்றார். மூத்த நிர்வாகத்துடன். அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய விவகாரங்கள். எனவே, முன்னதாக நாங்கள் ஒரு சிறிய கூட்டம் நடத்தினோம். பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய 2-3 மிக முக்கியமான விவகாரங்கள் உள்ளன என்பதை தெரிவித்தோம். நாங்கள் கொள்கைகளைச் செயல்படுத்துகிறோம்”, என்றார் அவர்.

எனினும், மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஏ.ஆர்.டி எனப்படும் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இக்கூட்டத்தில் இடம்பெறவில்லை என்று அவர் விவரித்தார்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பகார், MITI-இன் பொதுச் செயலாளர் டத்தோ ஹைரில் யாஹ்ரி யாகோப், MITI-இன் துணை அமைச்சர் சிம் செ சின் உட்பட அமைச்சின் மூத்த நிர்வாகத்தினர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)