கோலாலம்பூர், 24 பிப்ரவரி (பெர்னாமா) -- நேற்று, சபா, கோத்தா கினபாலுவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மணி 12.57-க்கு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
நிலநடுக்கத்தின் தாக்கம் மிக குறைவாக இருப்பதாக அண்மைய தகவல்கள் காட்டுவதாக, இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அர்தர் ஜோசப் குருப் கூறினார்.
சபா மற்றும் வட சரவாக்கை உள்ளடக்கி நிலநடுக்கத்தின் தீவிரம் பலவீனமான அளவில் மட்டுமே உள்ளதாக, நிலநடுக்கத்தின் வரைப்பட அமைப்பின் பகுப்பாய்வு காட்டுவதை மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா அறிவித்துள்ளதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ அர்தர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், சரவாக் மற்றும் தீபகற்ப மலேசியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டாலும், அது மூடக மண்டலத்தில் ஆழமாக இருப்பதால் பூமியின் மேற்பரப்பில் அதன் விளைவுகள் பலவீனமாக உள்ளதாகவும், கட்டிடங்கள் சேதம் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, நிலநடுக்கம் மிகவும் ஆழமாக அமைந்திருப்பதால் சுனாமி அபாயம் இல்லை என்றும், கடற்பரப்பில் பெரிய இடையூறு அல்லது இடப்பெயர்ச்சி ஏற்படவில்லை என்றும், இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, NRES வலியுறுத்தியது.
மேலும், கடற்கரையோரம் வசிப்பவர்கள் சுனாமி அச்சுறுத்தல்கள் குறித்து பீதியடைய வேண்டாம் என்று டத்தோ ஶ்ரீ அர்தர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)