பொது

3R தொடர்பில் நிந்தனைக்குரிய உள்ளடக்கத்தை பதிவேற்றம் செய்த மாணவர் கைது

25/02/2026 01:22 PM

கோலாலம்பூர், 25 பிப்ரவரி (பெர்னாமா) --  3R எனப்படும் மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான உள்ளடக்கத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த பரப்பியதாகச் சந்தேகத்தின் பேரில் மலேசிய பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழகமான, UMPSA -வைச் சேர்ந்த மாணவர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்த மாணவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.

மதத்தை அவமதித்ததற்காக, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 295-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

பிறருக்கு மனவேதனை அளிக்கும், துன்புறுத்தும், மிரட்டும் அல்லது தொந்தரவு செய்யும் வகையிலான தகாத உள்ளடக்கங்களை பகிர்வதற்காக தொடர்பு வசதிகள் அல்லது வலையமைப்பு சேவைகளை தவறான முறையில் பயன்படுத்திய குற்றத்திற்காக
1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம், செக்‌ஷன் 233 இன் கீழும் அம்மாணவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

முன்னதாக, நபிகள் நாயகத்தை அவமதிப்பது உள்ளிட்ட சினமூட்டும் உள்ளடக்கங்கள் சமூக ஊடகங்களில் பரலவாக பகிரப்பட்டது. .

இதனிடையே, பொது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் அளவிற்கு சமூக ஊடக உள்ளடக்கத்தை பரப்பிய தமது மாணவர் என்று கூறப்படும் நபர் குறித்து விசாரிக்கப்படுவதாகவும், குற்றவாளியான எந்தவொரு மாணவருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் UMPSA பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தவறான உள்ளடக்கம் அல்லது வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கத்தைப் பரப்புவதில் UMPSA சமரசம் செய்யாது என்று அது வலியுறுத்தியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)