விளையாட்டு

தங்கம் வென்ற வுஷூ வீராங்கனை ஜஸ்மினுக்கு அங்கீகாரம்

25/02/2026 07:14 PM

கோலாலம்பூர், 25 பிப்ரவரி (பெர்னாமா) --  கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் மட்டுமின்றி கலை, விளையாட்டு, தற்காப்பு உள்ளிட்ட துறைகளிலும், இன்றைய இளைஞர்கள் தங்களின் திறமையை உலக அரங்கில் நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில், சீன விளையாட்டு வீரர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வுஷூ போட்டியில் பங்கேற்ற ஒரே இந்திய பெண் வீராங்கனை என தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, உலக அரங்கில் தங்கப் பதக்கம் வென்றிருக்கும் ஜஸ்மின் அலக் தமது தனித்துவத்தை பலமாக மாற்றி இச்சாதனையைப் படைத்துள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் புகழாரம் சூட்டினார்.

''ஒருமைப்பாட்டு அமைச்சின் சார்பாக அவருக்கு சில அங்கீகாரம், உதவிகள் மற்றும் மேலும் இந்த விளையாட்டு மற்றும் தற்காப்பு துறையில் சிறந்து விளங்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கு எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் கண்டிப்பாக செய்வோம். ஜஸ்மின் மட்டுமின்றி அவரைப் போல இருக்கும் இந்திய இளம் பெண்கள். நீங்களும் சாதனைகள் படைக்கும் போது நிச்சயம் இந்த அரசாங்கம் உங்களுக்குத் துணையாக இருக்கும்'', என்றார் அவர்.

முன்னதாக சீனாவில் நடைபெற்ற 9-ஆவது உலக குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு, உலகளாவிய வுஷூ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள ஜஸ்மினை நேரில் சந்தித்து, யுனேஸ்வரன் தமது பாராட்டுகளைத் தெரிவித்து கொண்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது தங்கம் வென்ற வுஷூ வீராங்கனைக்கு, அவர் நற்சான்றிதழையும் உதவித்தொகையையும் வழங்கினார்.

இதனிடையே, இவ்வாண்டு நடைபெற்றவுள்ள சுக்மா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்வதையே தமது அடுத்த இலக்காக கொண்டிருப்பதாக, முன்னதாக ஜஸ்மின் கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)