புத்ராஜெயா, 01 மார்ச் (பெர்னாமா) -- மத்திய கிழக்கின் தற்போதைய சூழ்நிலையினால் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல நாடுகளில் சிக்கியிருக்கும் மலேசியர்களுக்கு வெளியுறவு அமைச்சு தமது அரச தந்திர பிரதிநிதிகள் மூலம் தூதரக உதவிகளை வழங்கியுள்ளது.
இதுவரை, தொடர்பு கொண்ட அனைத்து நபர்களும் அடையாளம் காணப்பட்டடோடு பாதுகாப்பாகவும் இருப்பதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா, இங்கிலாந்து, சிரியா, ஜோர்டன் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு வருவதோடு, உதவிகளும் வழங்கப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து இடையூறு மற்றும் வான்வெளி திடீரென மூடப்பட்டது உள்ளிட்ட தற்போது நிலவும் மிகவும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக, அண்மைய விமான அட்டவணைகள் மற்றும் பாதை மாற்றங்களுக்கு அனைத்து மலேசிய சுற்றுப்பயணிகளும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்துகிறது.
புத்ராஜெயாவில் உள்ள வெளியுறவு அமைச்சின் நடவடிக்கை அறை, தூதரக முயற்சிகளைத் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது.
மேலும், அந்த வட்டாரத்திற்கான அவசியமற்ற பயணங்களை ஒத்திவைத்து, தொடர்பு கொள்வதையும் உதவிகள் வழங்குவதையும் எளிதாக்க உடனடியாக தங்களை திரையில் காணும் அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து கொள்ள விஸ்மா புத்ரா மலேசியர்களுக்கு அறிவுறுத்தியது.
மலேசிய அரச தந்திர பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், நேரடியாக அமைச்சின் நடவடிக்கை அறையைத் +603-8887 4570 / மின்னஞ்சல்: dutyofficer@kln.gov.my வழியோ தொடர்பு கொள்ளலாம்.
இதனிடையே, ஈரான் மீது தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட பதற்றங்களில் பாதிக்கப்பட்ட மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மற்றும் அங்குள்ள மக்களுடன் மலேசியா ஒன்றிணைவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியாவில் முஸ்லிம்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக மலேசியா பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.
மேலும், மேற்கு ஆசியாவில் விரைவில் அமைதி, நீதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்கப்படும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)