புத்ராஜெயா, 10 மார்ச் (பெர்னாமா) -- மலேசியா போன்ற பல இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட நாட்டில் இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் எந்தவொரு வன்முறை, மத வெறுப்பை ஏற்படுத்தும் செயல், வெறுப்பு அல்லது தீவிரமான செயல்கள் அனைத்தும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நாட்டில் சமூகத்தின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மூன்று அண்மைய சம்பவங்களைத் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அதன் அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கடும்போக்கு வாதிகள் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரச மலேசிய போலீஸ் படை முழுமையான விசாரணையை மேற்கொண்டு, தற்போதுள்ள சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டார்.
சிக்கு சந்திரா Cikgu Chandra என்று அழைக்கப்படும் சமூக ஆர்வலரின் வாகனம், பொறுப்பற்ற தரப்பினரால் எரியூட்டப்பட்ட விவகாரம், இந்து மதத்தின் புனித சின்னமான திரிசூலத்தை ஒருவர் மிதித்துச் சேதப்படுத்திய காணொளி பரவலாகப் பகிரப்பட்டது ஆகியவை சம்பந்தப்பட்ட மதத்தினரிடையே சீற்றத்தைத் தூண்டுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதோடு, சுயாதீன மத போதகர் சம்ரி வினோத் மீதான தாக்குதல், தனிநபர் பாதுகாப்பு மற்றும் பொது அமைதி குறித்த அச்சத்தையும் எழுப்பியதாக ஏரன் தெரிவித்தார்.
ஆகவே, மலேசியர்கள் அனைவரும் உணர்ச்சிப்பூர்வமாகச் செயல்படாமல், ஊகங்களைப் பரப்பாமல், சமூக ஊடகங்களில், குறிப்பாக முக்கியமான விவகாரங்களில் கூற்றுகள் வெளியிடும்போது, எப்போதும் விவேகத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)