பொது

நோன்புப் பெருநாள் அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் 27 பொருள்கள்

10/03/2026 04:59 PM

புத்ராஜெயா, 10 மார்ச் (பெர்னாமா) -- நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மார்ச் 14 முதல் 28-ஆம் தேதி வரையில், 15 நாள்களுக்கு நாடு தழுவிய அளவில், பெருநாள் கால அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 27 வகையான பொருட்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 26-ஆக இருந்த நிலையில் இவ்வாண்டு கூடுதலாக ஒரு பொருள், அத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி  தெரிவித்தார்.

''எனவே இவ்வாண்டு நோன்புப் பெருநாள் காலத்திற்கான அதிகபட்ச விலைத் திட்டத்தைத் தொடர முடிவது மட்டுமின்றி, அதிகபட்ச உச்சவரம்பு விலையின் அடிப்படையிலும் பெரும்பாலான பொருள்கள் விலை குறைந்துவிட்டன. நாங்கள் அதைப் கண்காணித்து வருகிறோம். வெளியில் இருந்து மேற்கொள்ளப்படும், விநியோகத்தின் அளவு மற்றும் வானிலை போன்ற காரணங்களால் ஒரு சில பொருள்களின் விலை மட்டுமே உயர்ந்துள்ளன. அது குறிப்பாக நாம் வெளியில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களாகும்,'' என்று அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை அம்பாங்கில் நடைபெற்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு அமல்படுத்தப்படவிருக்கும் விலைக்கட்டுப்பாட்டு அறிவிப்புடன் கூடிய, நோன்புப் பெருநாள் மடானி ரஹ்மா விற்பனைத் திட்டத்தின் போது அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, பெருநாள் கால அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கட்டுப்பாட்டை அனைத்து வியாபாரிகளும் பின்பற்ற வேண்டும் என்று நினைவுறுத்திய அவர், அத்திட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருள்களுக்கும் இளஞ்சிவப்பு வண்ணத்திலான விலைப்பட்டியலைக் காட்சிப் படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மற்றொரு நிலவரத்தில், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, எரிபொருள் கடத்தல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, நாட்டின் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை அதிகரிக்கவுள்ளதாக டத்தோ அர்மிசான் கூறினார்.

"உலக எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிந்தாலும், தற்போது அது 100-ஐத் தாண்டிவிட்டது, எனவே சந்தை விலைக்கு ஏற்ப தொழில்துறை விலை அதிகரிக்கும் என்பதால் கடத்தலுக்கான வாய்ப்பும் ஏற்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாடுகளுக்கு எரிபொருள் கடத்தப்படுவதைத் தடுக்க, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, Ops Tiris சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

மக்களுக்குச் சுமை ஏற்படுத்தாத வகையில், ரோன்95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாக நிலைநிறுத்த அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)